காலிப்பணியிடங்களை நிரப்ப அவுட்சோர்சிங் முறையை கைவிடக்கோரி முதல்வருக்கு மனு
தர்மபுரி, செப்.9: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்க மாநில தலைவர் ஜெயந்தி, பொதுசெயலாளர் சேரலாதன் ஆகியோர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உயிர் காக்கும் மருத்துவத்துறையில் அவுட் சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்யக்கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தற்போது தனியார் நிறுவனம் மூலமாக, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆலோசர்கள், ஆய்வக நுட்புனர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆலோசகர்கள், ஆய்வக நுட்புனர்களை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனமே, நேரடியாக பணி நியமனங்கள் செய்யவேண்டும். மேலும், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை, ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடமாறுதல் வழங்கி விட்டு, அதன் பிறகு பணி நியமனங்களை செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.