சேதமான ஆற்றுப்பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை
தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி அருகே, சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்ட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்லப்பட்டி பிரிவு சாலையில் இருந்து கொல்லப்பட்டி, மூலக்காடு, தாலிகாரன் கொட்டாய் செல்லும் சாலை உள்ளது. வழிநெடுகிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போக்குவரத்து வசதிக்காக, தர்மபுரி -திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொல்லப்பட்டிக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக சனத்குமார நதி செல்கிறது. இவ்விடத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தற்போது, பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக தடுப்புச்சுவர் முற்றிலும் தகர்ந்தவாறு காணப்படுகிறது. இந்நிலையில், இச்சாலை வழியாக பள்ளி கல்லூரி பஸ்கள், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. ஆனால், பாலம் மிகவும் குறுகிய அளவில் உள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, சேதமடைந்துள்ள பாலத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய ஆற்றுப்பாலத்தை கட்ட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.