நெல் நாற்று நடவு பணி மும்முரம்
தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி மாவட்டத்தின் விவசாயத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியன முக்கிய சாகுபடியாகும். நெல் பயிர் செய்வதில் அனைத்து பகுதி மக்களும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் 24 ஆயிரம் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை நம்பி ஆடிப்பட்டத்திற்காக பழைய தர்மபுரி அருகே ராமாக்கள் ஏரி பாசன பகுதியில் விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஆடிப்பட்டத்தில் ராமாக்காள் ஏரியை நம்பி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடுவது வழக்கம். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து, நெல் பயிரிடுவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளோம். எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,’ என்றனர்.