வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நீதிமன்ற நுழைவு வாயில் முன் நடைபெற்றது. போராட்டத்திற்கு தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அழகமுத்து தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன், துணைத்தலைவர் குமார், இணை செயலாளர் சங்கீதா, மூத்த வழக்கறிஞர்கள் பிரகாசம், ராஜாங்கம், மாதேஸ், செல்வராஜ், வீராசாமி, மன்னன், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தர்மபுரி ஒருகிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த சிறப்பு மாவட்ட நீதிமன்றம்(எஸ்டிஜே) மற்றும் சிறப்பு சார்பு நீதிமன்றம்(எஸ்எஸ்ஜே) ஆகிய நீதிமன்றங்களை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மேற்படி நீதிமன்றங்கள் ஒருகிணைந்த நீதிமன்றத்தில் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்சோ நீதிமன்றம் மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்றங்களை வேறு கட்டிடங்களுக்கு மாற்றம் செய்யும் உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.