மண்புழு உர உற்பத்தி விளக்க பயிற்சி
தர்மபுரி, ஆக.3: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை துறை சார்பில், மண்புழு உற்பத்தி குறித்த அட்மா திட்ட பயிற்சி துணை வேளாண் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சோமனஅள்ளி கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சித்ரா கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை விவசாயம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இப்பயிற்சிக்கு பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய, மண்ணியல் துறை பேராசிரியர் சங்கீதா வேளாண் அறிவியல் செயல்பாடுகள், மண் வளத்தை மேம்படுத்துதல், உயிர் உரங்களின் பெருக்கம், பயன்பாடு, மண்புழு உரங்களை தயாரிக்கும் செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
சுப்பிரமணிய சிவா கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தலைவர் தனசேகர் கலந்துகொண்டு இயற்கை விவசாயம், இடுப்பொருட்களை தயாரிப்பு குறித்து பயிற்சியளித்தார். உதவி வேளாண் அலுவலர் சதாசிவம் துவரை நாற்று நடவு, கோடை உழவு மானியம் திட்டம், இயந்திர நடவு குறித்து விளக்கமளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவசங்கரி, உழவன் செயலி பதிவிறக்கம், பயன்கள் குறித்து விளக்கமளித்தார். உதவித் தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கபிலன் ஆகியோர் அட்மா திட்டங்கள் குறித்து விளக்கினர்.
பயிற்சியில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப துண்டு பிரசுகள் மற்றும் இடு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.