ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்கு ஆலை அமைக்க ஒப்புதல்
தர்மபுரி, ஜூலை 28: தர்மபுரி அருகே நெக்குந்தி கிராமத்தில் 900 ஏக்கரில் ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்காக ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் உற்பத்தி பணி தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பில் தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய பகுதியாக உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே பிரதானமாக உள்ளது. வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் கூறிக்கொள்ளும்படி ஒன்று கூட இல்லை. இதனால், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் வேலைதேடி வெளியிடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2010 -2011ம் ஆண்டு அப்போதைய தர்மபுரி திமுக எம்.பி., தாமரைச்செல்வன், தர்மபுரி மாவட்டத்தில் ராணுவ ஆராய்ச்சி மையம் அமைத்து வேலைவாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து நல்லம்பள்ளி ஒன்றியம் நெக்குந்தியில் ரூ.4500 கோடியில் ராணுவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் குழுவினர் தர்மபுரிக்கு நேரில் வந்து நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையன ஊராட்சிக்குட்பட்ட நெக்குந்தியில் சுமார் 900 ஏக்கர் நிலத்தை ஆய்வு செய்து இடத்தை தேர்வு செய்தனர்.
தற்போது இடத்திற்கான அனுமதி, நிலம் கையப்படுத்தல், ஆர்ஜிதப்பணிகள் உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடந்தது. அதன் பின்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து பாமக எம்.பி., அன்புமணி நாடாளுமன்றத்தில் பேசும்போது, தர்மபுரியில் ராணுவ ஆராய்ச்சி மையப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பேசினார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவ பாதுகாப்பு துறையில் இருந்து மத்திய குழுவினர் வந்து, ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். அதன் பின்பு ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் ராணுவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன நிபுணர்கள் குழு நேரில் வந்து நெக்குந்தியில் 900 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்தனர்.
நில ஆர்ஜிதம் மற்றும் அது தொடர்பான பூர்வாங்க பணிகள் நடந்தது. அதன் பின்பு பணியை கிடப்பில் போட்டு விட்டனர். இந்த ராணுவ ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இதையொட்டி, சிறு தொழில்களும் வளர்ச்சி பெறும். நில மதிப்பு மேலும் உயரும். தர்மபுரி மாவட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். வேலை தேடி வெளிமாநிலத்திற்கு செல்வது குறையும். உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கான பணியை உடனே தொடங்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் சதீஸ் கூறுகையில், ‘தர்மபுரி அருகே நெக்குந்தி கிராமத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்காக ஆலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, விரைவில் இன்னும் சில மாதங்களில் பணியை தொடங்க உள்ளதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆகையால், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற தங்கள் திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும்,’ என்றார்.