கச்சிராயபாளையம் அருகே ஆள் இல்லாத வீடுகளில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது
சின்னசேலம், ஜூலை 28: கச்சிராயபாளையம் அருகே ஆள் இல்லாத வீடுகளை குறிவைத்து நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 16 பவுன் நகை, ரூ.28,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் காட்டுகொட்டாய், மட்டிகைகுறிச்சி, சடையம்பட்டு உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 மாதங்களில் 6 திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்ததையடுத்து கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் எடுத்தவாய்நத்தம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில்களை கூறினார்.
இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், கல்வராயன்மலை வயலம்பாடியை சேர்ந்த சிவராமன் (20) என்பதும் எடுத்தவாய்நத்தம் பகுதி, மட்டிகைகுறிச்சி, சடையம்பட்டு பகுதிகளில் 6 இடங்களில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார், சிவராமனை கைது செய்ததுடன், அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 16 பவுன், ரூ.28,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் சண்முகசுந்தரம் என்பவரது வீட்டில் 6.5 பவுன் நகையும், ஏமப்பேரில் சிந்துஜா என்பவரது வீட்டில் 4 கிராம் தங்கம், ரூ.15,000 பணம், எடுத்தவாய்நத்தம் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவரது வீட்டில் ஒரு பவுன் நகை திருடு போனது குறித்து நேற்று முன்தினம் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த திருட்டு சம்பவங்களில் சிவராமனுக்கு தொடர்புள்ளதும் தெரியவந்துள்ளது.