கம்மாபுரம் அருகே தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் கைது: 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
மங்கலம்பேட்டை, ஜூலை 26: மங்கலம்பேட்டை அருகே நிலத்தகராறில் தாயை துப்பாக்கியால் சுட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் கம்மாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி பத்மாவதி(70). இவரது மகன் வீரபாண்டியன் (39). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை நிலத்தகராறு காரணமாக தான் வைத்திருந்த ஏர் கன் வகையை சார்ந்த துப்பாக்கியால் தனது தாயை தொடையிலும், தோள்பட்டையிலும் சுட்டுள்ளார்.
இதில் காயமடைந்த பத்மாவதி விருத்தாசலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இதனிடையே தகவலறிந்த உளவு பிரிவு போலீசார் அவர்களின் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் கம்மாபுரம் போலீசார், வீரபாண்டியனை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கடலூர் எஸ்பி ஜெயக்குமார் கம்மாபுரம் தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கொளஞ்சி ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.