சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நிரம்பியது பாசனத்திற்கு 220 கன அடி தண்ணீர் திறப்பு
சேத்தியாத்தோப்பு, ஜூலை 28: வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு பாசனத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி பகுதியில் உள்ள வீராணம் ஏரி தற்போது நான்காவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து விஎன்எஸ் மதகு வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நிரம்பியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து வெள்ள ராஜன் வாய்க்காலின் வழியாக நேற்று 220 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை வரை உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் சிதம்பரம் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் காந்த ரூபன் உத்தரவின் பேரிலும், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் அறிவுறுத்தலின் பேரிலும், சேத்தியாத்தோப்பு பாசன பிரிவு இளம் பொறியாளர் படைக்காத்தான் பாசனத்திற்கு அணைக்கட்டில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். மேலும் வெள்ளாற்றில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், பொதுமக்களின் குடிநீருக்காகவும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில் 200 கன அடி திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கிளாங்காடு, சென்னிநத்தம், அள்ளூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் உள்ள அனைத்து போர்வெல்களில் நீர்மட்டமும் உயரும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டை பொதுப்பணித்துறை ஊழியர்கள் கமலக்கண்ணன், லஷ்மணன், செந்தில், மூர்த்தி ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு வீராணம் ஏரி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.