ஆரோவில்லில் சென்னை ஐஐடி குழு ஆய்வு
வானூர், ஜூலை 25: வானூர் தாலுகா ஆரோவில்லில், ஆரோவில் அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பசுமை எரிசக்தி தீர்வுகளில் கவனம் செலுத்தவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐஐடி சென்னையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஆரோவில்லுக்கு வருகை தந்து, ஆரோவில் அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து ஒரு புதிய நிலைத்தன்மை கவனம் கொண்ட வளாகத்தை நிறுவும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
முன்னதாக ஐஐடி இயக்குனர் டாக்டர் காமகோடி, பேராசிரியர்கள் ராஜ்னிஷ் குமார், ராபின்சன் ஆகியோரை ஆரோவில் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அப்போது ஆரோவில் சிறப்பு அதிகாரி சீதாராமன், ஆலோசகர் வேணுகோபால், ஆரோவில் நகர அபிவிருத்தி கவுன்சிலின் சிந்துஜா மற்றும் அந்திம் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஆரோவில்லுக்கு சொந்தமான இடத்தில் ஐஐடி வளாகம் அமைக்க ஆய்வு செய்தனர். மேலும் தளம் மதிப்பீடு மற்றும் தொலைநோக்கு பிரதிநிதிகள் குழு முன்மொழியப்பட்ட சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த முயற்சியின் லட்சிய நோக்கம் மற்றும் குறிக்கோள்களை விவரித்தனர்.