தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா
தியாகதுருகம், ஜூலை 24: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன் பிடிக்க பொதுப்பணி துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனிநபரிடம் குத்தகைக்கு விட்டனர். இதையடுத்து குத்தகைக்கு எடுத்தவர்கள் பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்களை வளர்த்து பிடித்தனர். குத்தகை காலம் நிறைவடைந்த நிலையில் பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த மீன்பிடி திருவிழாவில் அகரகோட்டாலம், அணைகரை கோட்டாலம், வாணியந்தல், பெருவங்கூர், சிறுவங்கூர், தண்டலை, சூளாங்குறிச்சி, தண்டலை, தாவடிப்பட்டு, நாககுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரிக்குள் இறங்கி ஆர்வத்துடன் வலைகளை போட்டும், சேலைகளை கொண்டும், கைகளாலும் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
இதில் ஒவ்வொருவரும் ஐந்து கிலோ முதல் 20 கிலோ வரை கண்ணாடி, ரோகு, விரால்கள், ஜிலேபி, கெண்டை, இறால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து மூட்டை மூட்டையாக வீட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறுவர்கள் கூட்டாக பிடித்த மீன்களை சரிபாதியாக கூறு போட்டு பிரித்துக்கொண்டனர்.