சின்னசேலம் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் மருமகனிடம் போலீசார் தீவிர விசாரணை
சின்னசேலம், ஜூலை 29: சின்னசேலம் அருகே லாரி டிரைவர் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே மனைவி, மகள் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்த 17 வயது இளைஞரான அவரது மருமகனையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே லட்சியம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (48). இவரது மனைவி சரஸ்வதி (42). இவர்களுக்கு தேவிகா, தீபிகா, கனிகா, மகாலட்சுமி ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இதில் தேவிகாவை கச்சிராயபாளையம் அருகே உள்ள கரடிசித்தூரிலும், தீபிகாவை கச்சிராயபாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது இளைஞருக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
மேலும் விழுப்புரத்தை சேர்ந்த நாகமுத்து என்ற வாலிபருக்கு 3வது மகளான கனிகாவை திருமணம் செய்து கொடுக்க நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதில் தேவிகாவை தவிர மற்ற 3 மகள்களும் மைனர் பெண்கள் ஆவர். இந்நிலையில் வெளி மாநிலத்தில் வேலை செய்து வந்த மகேந்திரன் வீட்டுக்கு வரும்போது மகள்களை, மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் சரஸ்வதி, அவரது 2வது மகள் தீபிகா, மருமகன் 17 வயது இளைஞர் ஆகியோர் கடந்த 25ம் தேதி இரவு மகேந்திரனை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மனைவி சரஸ்வதி, அவரது மகள் தீபிகா ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான மேற்படி 17 வயது இளைஞர், மகேந்திரனை கொலை செய்துவிட்டு அன்று இரவே கேரளா தப்பித்து சென்றுள்ளார். இதையடுத்து சின்னசேலம் போலீசார் தனிப்படை அமைத்து கேரளா, பெங்களூரு போன்ற இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அந்த இளைஞர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைய வந்த போது சின்னசேலம் போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அவரை மகேந்திரன் கொலை செய்யப்பட்ட பகுதிக்கு அழைத்து சென்று அவரை எவ்வாறு கொலை செய்தார் என்பது குறித்து ஒத்திகை மூலம் செய்து காண்பிக்க கூறி அதனையும் பதிவு செய்த பின் கடலூர் சிறுவர், சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.