பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான பிரபல ரவுடி மீது குண்டாஸ்
புதுச்சேரி, ஆக. 4: புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (எ) திருநாவுக்கரசு (44). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் 26ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவரை சேர்த்து, லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, ஐகோர்ட் உத்தரவின்பேரில் சிபிஐக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. வழக்கின் ஆவணங்களை சிபிஐயிடம் கடந்த 30ம் தேதி லாஸ்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ணன் ஜாமீனில் வெளிவந்தார். 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கோர்ட்டில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்ணன் தலைமறைவானார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய லாஸ்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்து மாவட்ட நீதிபதியான கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தனர். அதன்பேரில், கர்ணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் கடந்த 31ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, கர்ணனை குண்டாசில் கைது செய்வதற்காக லாஸ்பேட்டை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில் தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதை அறிந்து, அவரை நேற்று முன்தினம் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.