ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக கீழே குதித்த பட்டதாரி பெண் பலி
திண்டிவனம், ஆக.4: திண்டிவனம் அருகே ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக கீழே குதித்த பட்டதாரி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரின் மகள் அருணா(32), இவர் பி.சி.ஏ படித்த பட்டதாரி. மேலும் இவருக்கு ஷேர் மார்க்கெட்டில் அதிக ஈடுபாடு இருந்ததால் அதில் அதிக பணத்தை முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாத காலமாக மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் அருணாவும் அவரது அம்மாவும் நேற்று முன் தினம் இரவு திருநாகேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தனது மூத்த மகளான ரமா(35) வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கிளாம்பாக்கத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் வந்தனர். அப்போது திண்டிவனம் அருகே உள்ள கூச்சிகொளத்தூர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் பின்புற இருக்கைக்கு அருகே இருந்த ஜன்னல் வழியே அருணா கீழே குதித்துள்ளார். இதில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அருணாவின் மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.