ரஜினியின் கூலி முதல் புஷ்பா- 2 வரை நடிகர்கள் கெட்டப்பில் முதல்வர் ரங்கசாமிக்கு பேனர் என்.ஆர். காங். தொண்டர்கள் உற்சாகம்
புதுச்சேரி, ஆக. 3: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியின் புதிய படமான ‘கூலி’ முதல் அல்லு அர்ஜூன் புஷ்பா-2 வரை பல்வேறு கெட்டப்புகளில் அவரது தொண்டர்கள் புதுச்சேரி முழுவதும் பேனர்களை வைத்து கொண்டாடி வருகின்றனர்.
1950 ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தவர் ரங்கசாமி, நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர், இளம் வயதில் ரசிகர் மன்றமும் நிறுவியவர். இவர், 1990ம் ஆண்டு அரசியலில் நுழைந்த அவர், அமைச்சர் பின்னர் முதல்வரானார். தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஆண்டுதோறும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை என்ஆர்காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்த தான முகாம் என பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னோட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அவரது பிறந்தநாள் வரும்போது பிரபலமாக இருக்கும் திரைப்படத்தின் நாயகனை போல ரங்கசாமி தொண்டர்கள் வடிவமைத்து பல்வேறு கெட்டப்புளில் பேனர்கள் வைப்பது வழக்கம். அதன்படி இம்முறை ‘கூலி’ திரைப்படம், ரெட்ரோ திரைப்படம், புஷ்பா 2, காலா, கர்ணன், ஜனநாயகன் என படத்தில் வரும் நடிகர்கள் போன்று ரங்கசாமியை சித்தரித்து முக்கிய சந்திப்புகளில் பேனர் வைத்துள்ளனர்.
அதேபோன்று விவசாயி, டென்னிஸ் விளையாடுவது, மாணவர்களுடன் உரையாடுதல், காமராஜருடன் பேசுவது, அன்னதானம் வழங்குவது, மக்களோடு மக்களாக இருப்பது போன்ற ஏஐ தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி தத்ரூபமாக பேனர்களை வைத்து என். ஆர் காங் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பேனரில் உள்ள ரங்கசாமியின் உருவமாற்றத்தை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.