சாலையில் படுத்து தூங்கிய வாலிபரிடம் செல்போன், பைக் திருட்டு
புதுச்சேரி, ஜூலை 24: புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (23). இவர் திருவாண்டார்கோவில் பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு கம்பெனியில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வேலை முடிந்து, ஊர் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் நள்ளிரவு 1.30 மணிக்கு புதுச்சேரி கடற்கரைக்கு பைக்கில் சென்றார். கடற்கரை சாலையை ஒட்டியுள்ள செயின்ட் லாரன்ட் வீதியில் உள்ள ஓட்டல் எதிரே நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்தார்.
காலை முதல் வேலை செய்ததால் அசதி காரணமாக ஓட்டல் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் கண்விழித்து பார்த்தபோது, அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ மர்ம நபர் அவரது செல்போன் மற்றும் பைக்கை திருடிச் சென்று விட்டனர். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து விஜயன், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பைக் மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.