ஒரே வாரத்தில் இருவர் சாவு: யானை தாக்கிய பெண் சிகிச்சை பலனின்றி பலி
தொண்டாமுத்தூர், ஜூலை 26: தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. கடந்த வாரம் நரசிபுரம் சவுக்குகாடு பகுதியில் துணி துவைக்க ஆற்றுக்கு சென்ற செல்வி (35) என்ற பெண்ணை காட்டு யானை மிதித்து கொன்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் விராலியூர் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவரது மனைவியான ரத்னா (51) அதிகாலையில் எழுந்து குப்பைகளை கொட்ட சென்ற போது, வீட்டின் அருகே மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை அவரை துதிக்கையால் தூக்கி தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து யானையை விரட்டியடித்து, காயமடைந்த ரத்னாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ரத்னா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.