வக்கீல் படுகொலையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பணி பறக்கணிப்பு போராட்டம்
கோவை, ஜூலை 31: வக்கீல் படுகொலையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் நீதிமன்ற ஆணையின்படி நீதிமன்ற ஊழியர் மற்றும் சர்வேயர் உடன் 28ம் தேதி பள்ளியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதனை அளவிட சென்னை வழக்கறிஞர் முருகானந்தம் சென்றார். அப்போது, சமூக விரோதிகளால் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார்.
இதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், நேற்று ஒருநாள் வழக்கறிஞர்கள் தங்கள் பணியை பறக்கணிப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூட்டுக்குழுவினர் கூறியதாவது: வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது தடுக்க பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி பல போராட்டங்களை (ஜேஏஏசி) நடத்தியுள்ளது.
தமிழக முதல்வர், சட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வற்புறுத்தி கேட்டுக் கொண்டோம். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்றிட வற்புறுத்தியும், நேற்று ஒருநாள் வழக்கறிஞர்கள் தங்கள் பணியிலிருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற பணியை புறக்கணித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.