வேளாண் பல்கலை.யில் காலநிலை மாற்ற தரவுகள் குறித்த கலந்துரையாடல்
கோவை, ஜூலை 30: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவர மூலகூறுவியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் மையத்தில் காலநிலை மாற்றத்தில் பெரிய தரவுகளைக் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் சுற்றுசூழல் அறிவியல் துறையின் தரவு மைய இயக்குனர் கிரி பிரகாஷ் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வேளாண் பல்கலை.யில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், தாவர மூலகூறுவியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் மையத்தின் இயக்குனர் செந்தில் நடேசன் வரவேற்றார். அப்போது, அவர் காலநிலை அறிவியலில் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களை பெரிய தரவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை விளக்கினார். காலநிலை வடிவங்களை மாதிரியாக்குதல், சுற்றுச்சூழல் தாக்கங்களை முன்னறிவித்தல் மற்றும் கொள்கை முடிவுகளை ஆதரிப்பதில் உயர் செயல்திறன் கணினி, தரவு ஒருங்கிணைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பங்கை அவர் வலியுறுத்தினார்.
காலநிலை மாற்ற மாதிரியாக்கம், தரவு துல்லியம், இயந்திர கற்றல் பயன்பாடுகள் மற்றும் ஏஐ சார்ந்த காலநிலை ஆராய்ச்சியில் நெறிமுறை பரிசீலனைகள் குறித்த கேள்விகளை இறுதி மற்றும் மூன்றாம் ஆண்டு உயிரித்தொழில்நுட்பவியல் மற்றும் உயிரி தகவலியல் மாணவர்கள் எழுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் கிரி பிரகாஷ் பதிலளித்தார்.