கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் முத்து விழா கொண்டாட்டம்
கோவை, ஜூலை 30: கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு பள்ளி இறுதியாண்டு (12ம் வகுப்பு) படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 26ம் தேதி மாலை பள்ளி அரங்கில் நடைபெற்றது. அந்த ஆண்டில் படித்த மாணவ, மாணவிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இந்த விழாவில் பங்கேற்பதற்காகவே வருகை தந்திருந்தனர்.
அப்போதைய ஆசிரியர், ஆசிரியைகள் சிலர் தங்களிடம் படித்த மாணவ, மாணவிகள் குறித்த பல் வேறு விஷயங்களை விழா மேடையில் நினைவுகூர்ந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். விழாவில், முன்னாள் மாணவர்கள் முத்து விழாவையொட்டி கணினி துறையில் பாடங்களை எளிதில் கற்றுக் கொள்வதற்காக கோவை மாவட்டம் கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 25 பேருக்கு ஹெட் போன்களை முன்னாள் மாணவர்கள் கதிரவன், குமார், கார்த்திக், ஸ்ரீதர், மோகனசுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவ, மாணவிகள் இனித்தா, உமா மகேஸ்வரி, ஜெயந்தி, பிரியா, காயத்ரி, ஆனந்த் ரோஸ் ஜான், கிருஷ்ணா, காலின் கிறிஸ்டோபர், கதிரவன், வின்ஸ்டன், டேவிட் அப்பாதுரை ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், 1995ல் படித்த மாணவர்களுக்கு பாடம் நடத்திய அப்போதைய ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் இன்னாள் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.