நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தில் வந்த வாலிபர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடியதால் பரபரப்பு
சூலூர், ஜூலை 30: சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் போலீசாரை பார்த்ததும் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தப்ப முயன்றார். அப்போது போலீசார் துரத்தி பிடித்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் உதவி ஆய்வாளர் முருகானந்தம் ஈடுபட்டார்.
அப்போது, நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அதனை ஓட்டி வந்த இளைஞர் காவல்துறையினரை கண்டதும் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். தொடர்ந்து, காங்கேயம்பாளையம் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். உதவி ஆய்வாளர் முருகானந்தம் உடனடியாக வாலிபரை துரத்தி பிடித்து சூலூர் காவல் நிலையம் கூட்டி வந்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், வாலிபர் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியை சேர்ந்த தேவா என்பதும், அவர் தனது கூட்டாளிகளான 2 சிறுவர்களுடன் இணைந்து கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தேவா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 உயர் ரக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.