நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கோவை, ஆக.22: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (23ம் தேதி) சனிக்கிழமை காலை 8 மணியளவில் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் இருந்து உற்பத்தி துறை, ஜவுளித்துறை, என்ஜினீயரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோ மொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் மாற்றுத்திறனாளிகள், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், நர்சுகள், என்ஜினீயரிங் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். வேலை வாய்ப்பற்றவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.