21 கிலோ கஞ்சா விற்க முயன்றவருக்கு 14 ஆண்டு சிறை
கோவை, ஆக.1: திருப்பூர் காமநாயக்கன்பாளையம் போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில் எம்.ஊத்துக்குளி ரோட்டில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி சோதனை செய்தனர். அப்போது ஒரு நபர் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. போலீசார் வெள்ளை நிற சாக்கு பையுடன் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 21 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது.
போலீசார் விசாரித்த போது கஞ்சா கடத்தி வந்தவர் பெயர் நீலு குமார் பாரிக் (40) எனவும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், கஞ்சாவை பல்வேறு பகுதியில் இவர் விற்க திட்டமிட்ட விவரம் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். நீலுகுமார் பாரிக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கானது கோவை மாவட்ட இன்றியமையா பொருட்கள் மற்றும் போதை பொருள் தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கில் நேற்று போதை பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட நீலு குமார் பாரிக்கிற்கு 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1.50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரானார்.