தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் அறிமுக விழா
கோவை, ஜூலை 29: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக விழா மற்றும் வாடிக்கையாளர்கள், டீலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயல் இயக்குனர்கள் யோகேஷ் வர்சனே, யோகேஷ் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை பொது மேலாளர் காசி விஸ்வநாதன் வரவேற்றார். விழாவில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட புதிய காகிதத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கடந்த 40 ஆண்டாக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. தற்போது நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மேம்படுத்தப்பட்ட காகிதம் விரைவாக நகல் எடுப்பதற்கு உள்பட பல்வேறு உபயோகத்துக்கு உதவும் வகையில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத, தண்ணீரின் பயன்பாட்டை மிகவும் குறைத்து நாங்கள் காகிதம் தயாரித்து வருகிறோம். அத்துடன் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு கொடுத்து வருகிறோம்.
காகிதம் தயாரிக்க 2.80 லட்சம் பசுமை தோட்டம் அமைத்து அந்த மரத்தின் மூலமும், கரும்பு சக்கை மற்றும் பழைய காகிதம் மூலம் புதிய காகிதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வருடத்துக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் டன் காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று காகித அட்டை 2 லட்சம் டன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கோவை மாவட்ட காகித பொருட்கள் விற்பனை சங்கத்தலைவர் வெங்கடேஷ், துணைத்தலைவர் வீனஸ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.