விபத்தை தவிர்க்க டிவைடர் தேவை
கோவை, ஆக.3: கோவை நகரில் பல இடங்களில் சிக்னல்கள் பழுதான நிலையில் இருக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ரோட்டை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
குறிப்பாக, மேம்பால பணிகள் நடக்கும் இடங்களில் சிக்னல்கள் அகற்றி வைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சிக்னல்கள் இயங்கவில்லை. யு டர்ன் அதிகமாக்கப்பட்ட இடங்களில் போதுமான அளவு டிவைடர் வைக்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசல், ரோடுகளில் ஏற்பட்ட மேடு பள்ளங்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசாரும் சிக்னல் இல்லாத இடங்களில் தொடர்ந்து நின்று பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக போதுமான நிதி வழங்கப்படவில்லை. நிதி கிடைத்தால் சிக்னல், டிவைடர், சாலை பாதுகாப்பு பணிகளை நடத்த முடியும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். மாநகர் பகுதி ரோட்டில் டிவைடர், கோன் மற்றும் போக்குவரத்து சீரமைக்கும் கருவிகள் அவசியம் தேவைப்படுகிறது. சிக்னல்களில் வாகனங்களை முறையாக இயங்க வேண்டும்.
விதிமுறை மீறல் இருக்க கூடாது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ப்ரீ லெப்ட், நோ ப்ரீ லெப்ட் முறையாக கடை பிடிக்க வேண்டும். நகரில் வாகன பார்க்கிங் குழப்பம் அதிகமாக இருக்கிறது. வாகனங்கள் நிறுத்தும் இடங்களை முறைப்படுத்த வேண்டும். வாரம் ஒரு பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் நடைமுறையால் போதுமான பலன் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.