கோவை ஓட்டலில் மனைவியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கணவனுக்கு கத்திக்குத்து
கோவை, ஜூலை 24: கோவை ஓட்டலில் மனைவியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கணவனுக்கு கத்திகுத்து விழுந்தது. 3 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சித்தாபுதூர் ஹரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் ஷியாம் (20). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவியுடன் நேற்று முன்தினம் சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 பேர், திடீரென ராஜ் ஷியாமிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும், ராஜ் ஷியாமை தாக்கி, கத்தியால் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர், அந்த ஆசாமிகள் தப்பிச்சென்றுவிட்டனர்.
ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடிய அவரை, அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்விரோதம் காரணமாக இந்த கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி காட்டூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து, தப்பி ஓடிய 3 ஆசாமிகளை தேடி வருகின்றனர்.