விவசாயிகள் குறைதீர் கூட்டம் திடீர் ரத்து
கோவை, ஜூலை 24: கோவை மாவட்ட தெற்கு ஆர்டீஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க விவசாயிகள் பலர் புகார் மனுவுடன் வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில் விவசாயிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கூட்டம் நடத்தப்படும். அங்கே புகார் தரலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கூட்டம் ரத்து செய்த தகவல் முன் கூட்டியே விவசாய அமைப்புகளுக்கு தெரிவித்து விட்டோம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் பலர் ரத்து செய்த தகவல் வரவில்லை. வழக்கமாக கோட்ட அளவில் நடக்கும் விவசாயிகள் கூட்டம் எப்போது நடக்கும் என கேட்டனர். அதற்கு இந்த மாதம் கூட்டம் கிடையாது எனக்கூறி விட்டனர். திடீரென குறை தீர்ப்பு கூட்டத்தை அதிகாரிகள் ரத்து செய்து விட்டது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.