பருவமழையால் வீடுகளில் மின் விபத்து தவிர்க்க மின் இணைப்புகளில் ஆர்சிசிபி கருவி பொருத்த மின்வாரியம் அறிவுறுத்தல்
கோவை, ஜூலை 28: கோவை மாவட்டத்தில் பருவ மழை பெய்து வரும் நிலையில் வீடுகளில் மின் விபத்துகளை தவிர்க்க மின் இணைப்புகளில் ஆர்சிசிபி கருவி பொருத்துமாறு, மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால், கோவை மாவட்டத்தில் மின்தடை மற்றும் மின்விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பருவமழையை எதிர்க்கொள்ளும் வகையில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்போது, வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. பழுதடைந்த மின் கம்பங்கள் கண்டறியப்பட்டு அவை மாற்றப்பட்டு வருகின்றன. சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. பழுதடைந்த இழுவை கம்பிகள் சரி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், மழையால் பல்வேறு இடங்களில் மின் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மின் நுகர்வோரின் அறியாமை காரணமாகவும், மின் இணைப்புகளில் மின்கசிவு ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மின்கசிவு ஏற்படுத்திய தீ விபத்தால் உயிரிழப்பு மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்படுகிறது.
இந்த மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை ரெசிடுயல் கரண்ட் சர்க்கியூட் பிரேக்கர் (ஆர்சிசிபி) என்ற மின் கசிவு தடுப்பான் பயன்படுத்தி தடுக்க முடியும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆர்சிசிபி மின் கசிவு தடுப்பானை வீடுகளில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தடுக்க முடியும். இந்த உபகரணம் மின் இணைப்பு வளாகத்தில் ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து மின் விபத்தில் இருந்து பாதுகாக்கும்.
எனவே, ஆர்சிசிபி கருவி பொருத்தப்படாத பழைய மின் இணைப்புகளில் அதனை பொருத்த வேண்டும். இதனால், உயிரிழப்பு தடுக்கப்படும். இது வீடுகளில் மின் விபத்துகளை தடுக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போட வேண்டும். அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் மூடியுடன் கூடிய எர்த்தொட்டி அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை வீடுகளின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள்.
மழை காலம் என்பதால், மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், எர்த் பிட் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். இடி, மின்னல் போது மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை அடியில் தஞ்சம் அடைய வேண்டாம். இடி, மின்னலின் போது டி.வி, மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக்கூடாது. மின்சார தீ விபத்துக்கான தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான ஒயர்கள் மற்றும் மின்சார சாதனங்களை மட்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.