ஒரே நாளில் 5 பேர் மீது குண்டாஸ்
கோவை, ஆக. 4 : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், ஸ்பா நடத்தியும் இளம் பெண்களை விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மதன் கண்ணன் (37), திண்டுக்கலை சேர்ந்த அறிவழகன் (30), மதுரையை சேர்ந்த கோபிநாத் (34) ஆகியோர் கடந்த 2 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையிலும், பிணையில் வெளிவந்து மீண்டும் பெண்களை விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர். இதனால் மதன்கண்ணன், அறிவழகன், கோபிநாத் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.இதேபோல சரவணம்பட்டி பகுதியில் ஹேமந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணபதியை சேர்ந்த அருண்குமார் (29), கோவை மாநகரில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரத்தினபுரியை சேர்ந்த சுஜிமோகன் (29) ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவு நகல்கள் கோவை மத்திய சிறையில் உள்ள இவர்களுக்கு போலீசார் வழங்கினார்.