பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சியே ஏற்க முடிவு
சென்னை: சென்னையில் உள்ள சாலைகளில் பாதாள சாக்கடை, வடிகால், மின் புதைவடம், தனியார் நிறுவன கேபிள் பதிக்கும் பணி உள்ளிட்டவற்றுக்காக அடிக்கடி பள்ளம் தோண்டப்படுகிறது. இதற்காக, அந்தந்த துறைகள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி, பணிகள் முடிந்த பின்னர் சாலையை சீரமைக்க வேண்டும். ஆனால், பணிகள் முடிந்த பிறகும் இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சென்னையில் உள்ள பேருந்து வழித்தட சாலைகள், உட்புற சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு அனுமதி பெறும் துறைகள், சாலையின் தன்மைக்கு ஏற்ப சீரமைப்பு கட்டணங்களை செலுத்த வேண்டும். ஆனால், பெரும்பாலும் இந்த துறைகள் நியமிக்கும் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி விதிகளை பின்பற்றுவதே இல்லை.
மற்ற துறைகளின் ஒப்பந்ததாரர்கள் இதை பின்பற்றாமல், தரமற்ற முறையில் சாலையை சீரமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தீர்வாக, சென்னை மாநகராட்சியே இனிமேல் அனைத்து சாலை மறுசீரமைப்பு பணிகளையும் முழுமையாக செய்ய முடிவு செய்துள்ளது. இதன்மூலம், சென்னையின் சாலைகள் முறையாகவும், தரமாகவும் பராமரிக்கப்படும். மக்கள் பயணிக்கும் சாலைகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாறும். இது சென்னை மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தரும்.