சுகாதாரமற்ற முறையில் உணவு விற்ற கடைகள் அகற்றம்
அண்ணாநகர், ஜூலை 25: கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில், தள்ளுவண்டி கடை உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்தன.
இது தொடர்பாக, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதிக்கு வந்த புகாரின் பேரில், அவர் நேரில் ஆய்வு செய்து, அந்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில், அங்காடி நிர்வாக ஊழியர்கள் அங்கிருந்த தள்ளுவண்டி உணவகங்களை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாயில் தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் தள்ளுவண்டி கடையை அமைத்து, திறந்தநிலையில் உணவுகளை வைத்து, விற்பனை செய்து வந்தனர். இதனால் அங்கு சாப்பிட வரும் கூலி தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, அங்காடி நிர்வாகத்தினர் இந்த தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்,’’ என்றனர்.