பழைய இரும்பு குடோனில் ராட்சத ஆசிட் டேங்க்கை உடைத்தபோது காஸ் கசிவு: கண் எரிச்சலால் பொதுமக்கள் அவதி
திருவொற்றியூர், ஜூலை 26: திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெருவில் ராமலிங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான குடோன்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள ஒரு பழைய இரும்பு பொருட்களை வியாபாரம் செய்யும் குடோனில், நேற்று ராட்சத ஆசிட் டேங்கரை அங்குள்ள பணியாளர்கள் வெட்டி உடைக்க முயன்றனர். அப்போது, அந்த டேங்கரிலிருந்து காஸ் கசிந்தது.
இதை பார்த்த பணியாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து உடைந்த டேங்கர் வழியாக வேகமாக காஸ் வெளியேறியதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், இருமல், மூச்சுத் திணறல், குமட்டல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீர் மற்றும் பிரத்யேக திரவத்தை கொண்டு காஸ் கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பாதுகாப்பு மற்றும் அனுமதி இல்லாமல் இந்த குடோன் ஆபத்தான முறையில் இயங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விபத்து ஏற்பட்ட குடோனை சீல் வைத்தனர்.