சிறுமிக்கு பாலியல் தொந்தரவு உறவினருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை, ஜூலை 30: மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அவரது உறவினரின் கடைக்கு சென்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு மே 15ம் தேதி கடையில் இருந்த சிறுமியை 30 வயதான அவரது உறவினர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்படி பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரித்த மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உறவினரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.பத்மா முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வாலிபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1.50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.