வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாத இறுதிக்குள் வடிகால் பணி முடிக்கப்படும்: மேயர் பிரியா பேட்டி
பெரம்பூர், ஆக.2: கொளத்தூரில் உள்ள ஜம்புலிங்கம் பிரதான சாலையில் மாநகராட்சி சார்பில், நவீன வசதியுடன் ரூ.13 கோடியில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மேயர் பிரியா மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். இதையடுத்து, கொளத்தூர் சோமையா தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 10 வகுப்பறைகள் கொண்ட சென்னை உயர்நிலைப் பள்ளி கட்டுமான பணி, கொளத்தூரில் உள்ள ரங்கசாமி தெருவில் கட்டப்பட்டு வரும் சென்னை நடுநிலைப் பள்ளிக்கான கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் முக்கியமான பகுதிகளில் மழைநீர் வடிக்கால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. உட்புற பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து வடிகால் பணிகளும் முடிக்கப்படும். மழைக்காலத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வோம், என்றார்.