சென்னையில் 2 நாட்களுக்கு அஞ்சலகம் செயல்படாது: அஞ்சல் துறை தகவல்
சென்னை, ஆக.2: புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த இருப்பதால் சென்னையில் 2 நாட்களுக்கு தபால் நிலையங்களில் பரிவர்த்தனைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில், வருகிற 4ம் தேதி முதல் அஞ்சல் துறையின் புதிய ‘மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் 2.0’ புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை செயல்படுத்த, இன்று மற்றும் நாளை பரிவர்த்தனைகள் இல்லா நாளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த 2 நாட்களுக்கு சென்னை நகர மண்டலத்தில் உள்ள சென்னை பொது அஞ்சலகம், அண்ணாசாலை அஞ்சலகம், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, தாம்பரம், திருவண்ணாமலை, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை மத்திய கோட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது. புதிய தொழில் நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்கு இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. இது மிகச்சிறந்த டிஜிட்டல் சேவைகளை பெற எடுக்கபட்டது முடிவு. எனவே, பொது மக்கள் இந்த சேவை இல்லாத நாட்களில் எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.