சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரிப்பு
சென்னை, ஆக.1: ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை புறப்பாடு மற்றும் வருகை பயணிகள் என மொத்தம் 30,49,693 பேர் பயணித்துள்ளனர். ஆனால், கடந்த 2024ம் ஆண்டு, முதல் 6 மாதங்களில் 29,73,265 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சர்வதேச முனையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.57 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு முனையத்தில், இந்தாண்டு ஜனவரி 1ம்தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வருகை, புறப்பாடு பயணிகள் என மொத்தம் 86,93,278 பேர் பயணித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு இதே காலகட்டத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை 78,78,678. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் பயணித்த வருகை, புறப்பாடு பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,17,42,971. கடந்த 2024ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் சர்வதேசம் மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணித்த வருகை, புறப்பாடு பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,08,51,944. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலையங்களில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரித்து உள்ளது.
2025ம் ஆண்டு கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் 77,748 விமானங்கள், உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில், வருகை, புறப்பாடு அனைத்திலும் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் 72,216 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5,532 விமானங்கள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, தோகா, சார்ஜா, இலங்கை, லண்டன், பிராங்பர்ட் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளன. உள்நாட்டு விமானங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளன.