திட்டமிடாத வடிகால் பணி காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
பல்லாவரம் ஆக.4: பல்லாவரம் அருகே திட்டமிடாத வடிகால் பணி காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஆண்டாள் நகர், ராமானுஜர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பொழிச்சலூர் முதல் கவுல் பஜார் வரை செல்லும் பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்றது.
அவ்வாறு, கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் அனைத்தும் சரியான மட்டம் பார்த்து, தரை உயரத்திற்கு கட்டாமல், தரையை விட சற்று உயரமாக கட்டியுள்ளனர். இதனால், இப்பகுதிகளில் கழிவுநீர் வெளியே வழியின்றி, குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ளது.
மழைக்காலங்கள் மட்டுமின்றி, எப்போதுமே கழிவுநீர் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன், கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சலால் பலர் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘முறையான திட்டமிடல் இன்றி வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் வடிகால் வழியாக தண்ணீர் அடையாறு ஆற்றில் கலக்க முடியாமல், கழிவுநீருடன் கலந்து, குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், கொசு உற்பத்தி, துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படுகிறோம்.
எனவே, இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை நிரந்தரமாக அகற்றி, மீண்டும் குடியிருப்புகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்காமல் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.