மாநகராட்சி ஒப்பந்ததாரரை வெட்டிய வாலிபருக்கு வலை
பெரம்பூர், ஆக.4: வியாசர்பாடி பி.வி.காலனி 19வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (56), சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ராமச்சந்திரனின் தங்கை மகன் பிரதீப் இவருடன் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் ராமச்சந்திரனின் தோள்பட்டையில் வெட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த ராமச்சந்திரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வீராசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து வியாசர்பாடி பி.வி.காலனி 29வது தெருவைச் சேர்ந்த பிரதீப்குமார் (19) என்பவரை தேடி வருகின்றனர்.
பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் யுவனேஸ்வரன் (22). சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது 12 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மதுபோதையில் பொதுமக்களை அச்சுறுத்துவதாக செம்பியம் போலீசார் யுவனேஸ்வரனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்த மாதவனை (24), கடந்த 26ம் தேதி ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கிய வழக்கில் மணி பிரசாத், ராகுல், அருண்(எ) இமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த நவீன் (19) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.