தரமணி பாலிடெக்னிக் வளாகத்தில் 3 நாமத்துடன் நல்லபாம்பு
வேளச்சேரி: தரமணி, ஓ.எம்.ஆர். சாலையில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் நேற்று நாகபாம்பு ஒன்று இருப்பதை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர், வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பாம்பு பிடிக்கும் ஊழியர்கள், உரிய உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி வளாகத்தில் தேடினர்.
நீண்ட தேடலுக்கு பின் சுமார் 2 அடி நீள நாகப்பாம்பு இருந்ததை கண்டு பிடித்தனர். வழக்கமாக, நல்ல பாம்பு தலையில் நாமம் இருக்கும். அதை வைத்து, நல்ல பாம்பு என அடையாளம் காண்பர். ஆனால் இந்த நாகப்பாம்பின் முதுகிலும் 2 நாமம் இருந்தது. இதை ஊழியர்கள் அதிசயமாக பார்த்தனர். பின்னர் அந்த பாம்பை கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தினால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.