கோயம்பேடு மார்க்கெட் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக அமைத்த 300 கடைகள் அகற்றம்: அங்காடி நிர்வாக அதிகாரி அதிரடி
அண்ணாநகர், ஜூலை 24: கோயம்பேடு மார்க்கெட் அருகே அங்காடி நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 300க்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டுள்ளன. இந்த கடைகளால் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதன்படி அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள இடத்தை ஆய்வு செய்து, ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்தினார்.
இந்நிலையில் அங்காடி அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் அதே இடத்தில் முளைத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக மீண்டும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து நேற்று காலை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஆய்வு செய்தார். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 300 ஆக்கிரமிப்பு கடைகளை ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினார்.