கிரிக்கெட் மைதானம் அமைக்க அமைச்சரின் சொந்த செலவில் ஏரியை சமன்படுத்தும் பணி
அரியலூர் ஜூலை 28: செந்துறை இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று செந்துறை ஏரியில் தற்காலிக கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணியினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதனால் அமைச்சருக்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் கடந்த மாதம் 24 ஆம் தேதி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சுற்று பயணம் மேற்கொண்டார்.
செந்துறை செம்படவன் குளம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள பல்வேறு குளங்களை புனரமைக்கும் பணிகளை துவக்கி வைத்துவிட்டு செந்துறையில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள 4 வழிச்சாலையில் உள்ள கட்டையன்குடிக்காடு குடிநீர் குளத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைக்க சென்றார். அப்போது செந்துறை பெரிய ஏரி அருகே வந்தபோது 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைச்சரின் காரை நிறுத்தினர்.
இதனால் அமைச்சர் சிவசங்கர் காரிலிருந்து கீழே இறங்கி இளைஞர்களிடம் காரை நிறுத்தியதற்கான காரணம் குறித்து கேட்டார். அப்போது அவர்கள் செந்துறை பெரிய ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தங்களுக்கு தற்காலிக கிரிக்கெட் மைதானம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் கட்டையன்குடிக்காடு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு திரும்பி வந்து இடத்தை பார்த்து விட்டு செய்து தருகிறேன் என்று கூறி சென்றார்.
அதனைத் தொடர்ந்து நேற்று செந்துறை ஏரிக்கு வருகை தந்த அமைச்சர் சிவசங்கர், தனது சொந்த செலவில் ஏரியின் மேடான பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற ஜேசிபி இயந்திரங்களை வழங்கி பணிகளை தொடங்கி வைத்து அங்கிருந்து சென்றார். தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சருக்கு அப்பகுதி இளைஞர்கள் நன்றி தெரிவித்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.