பாடாலூரில் டாஸ்மாக் பார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
பாடாலூர், ஜூலை 28: பாடாலூரில் டாஸ்மாக் பார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (60). அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்ததால் தினமும் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வாராம்.
இதனை தங்கராசுவின் மனைவி அங்கம்மாள் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாத தங்கராசு தொடர்ந்து மதுகுடித்து போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாடாலூர் கிழக்கு பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குப்பைகள் கொட்ட சென்ற தூய்மை பணியாளர்கள் இதுகுறித்து பாடாலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.