அரியலூர் மாவட்டத்தில் தேவாலயங்களை பழுதுபார்க்க புனரமைத்தல் பணிக்கு மானியம்
அரியலூர், ஜூலை 25: அரியலூர் மாவட்டத்தில் தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகைக்கு விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும்.தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது.
அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத் தொகை வழங்கிய பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இம்மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.மேற்படி திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்:
தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம் திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சொரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல். தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.10 லட்சம் மானிய தொகையும், 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.15 லட்சம் மானிய தொகையும் மற்றும் 20 வருடத்திற்கு மேல் இருப்பின் 20 லட்சம் ரூபாய் மானிய தொகையும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.