ஆடி 2வது வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
அரியலூர், ஜூலை 27: ஆடி 2வது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆடி மாதம் 2வது வெள்ளிக்கிழமையாகும்.
இதனையொட்டி, அரியலூர் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னர் ரோஜா, மல்லிகை, சம்பங்கி,தாமரை பூ, தாழம்பூ, முல்லைப்பூ, அரளி, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.
அதேபோல் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அரியலூர் அடுத்த கொல்லாப்புரம், படைநிலை உள்பட கிராமங்களிலுள்ள மாரியம்மன் கோயில்களில் பால்குட திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.