அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி
அரியலூர், ஜூலை 24: அரியலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி செப். 12ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரியலூர் மாவட்ட அளவில் ஐந்து பிரிவுகளில் மொத்தமாக 53 வகையான போட்டிகளும், மண்டலஅளவில் 14 வகையான போட்டிகளும் மொத்தம் 67 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில், இப்போட்டியானது மாவட்ட மற்றும் மண்டல அளவில் செப்டம்பர் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரமும் ,3ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
குழு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல்பரிசாக தலா ரூ.75 ஆயிரம், 2ம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், 3ம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுபோட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, 2ம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் சான்றிதழ்களுடன் பதக்கம் வழங்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட (01.01.2007 அன்று அல்லது அதற்குபின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்) பள்ளி மாணவ மற்றும் மாணவிகள்,25 வயதிற்குட்பட்ட (01.07.2000 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்) கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள், 15 வயதுமுதல் 35 வயதுவரை உள்ள பொதுபிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அனைத்து வயது தமிழ்நாடுஅரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள். ஆகஸ்ட் 16 மாலை 6 மணிஆகும்.
எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://cmtrophy.sdat.in அல்லது https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள போட்டிகளில் பங்கேற்பது குறித்தான முழுவிவரங்கள் மற்றும் விதிமுறைகளை படித்துபிறகு சரியான பிரிவில் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு செய்திட வேண்டும்.
(குறிப்பு. இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும், நேரில்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது) தாங்களாகவோ அல்லது தாங்கள் பயிலும் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.