தா.பழூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும்
தா.பழூர், ஜூலை 28: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் மண்டல தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மண்டபத்தை வந்தடைந்தது. ஒன்றிய பொருளாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.
அரியலூர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சக்திவேல் ,பொருளாளர் காசிநாதன், துணை செயலாளர் நீலமேகம், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராஜராஜன், ஒன்றிய துணைத் தலைவர் வெற்றி வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிறுவனர் பேரவை பொதுச் செயலாளர் முருகேசன், மாநிலத் தலைவர் பழனிவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் ராமலிங்கம் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், தா.பழூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் புதுப்பித்தல் ஓய்வூதியம் ஆகிய இரண்டும் தொழிலாளர்கள் பெறுவதற்கு விண்ணப்பத்தில் சான்று வழங்க தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கும் ஓய்வூதியத் தொகை ரூ.1200 லிருந்து உயர்த்தி மாதம் ரூ.3000 வழங்க வேண்டும்.
தா.பழூரில் ஆண் பெண் இருபாலருக்கும் முறையான கழிப்பிட கட்டிட வசதி செய்து தர வேண்டும். ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளில் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். நகரில் உள்ள ஆடு கோழி மீன் இறைச்சி கடைகளில் ஏற்படும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டப்படுவதை தடுக்க துர்நாற்றம் வீசி மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படுவதை தடுக்க துறை சார்ந்த அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக தா.பழூர் ஒன்றிய தலைவர் ராஜ கண்ணன் நன்றி கூறினார். இதில் மாநில ,மண்டல ,மாவட்ட மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.