நவராத்திரி ஸ்பெஷல் சமையல் வகைகள்
வெள்ளை சுண்டல், கருப்பு சுண்டல், பச்சைப்பயறு சுண்டல், காராமணி சுண்டல் இவை மட்டும்தானா. வேறு ஏதாவது புதிதாக, ஆரோக்கியமாக செய்யலாமா என யோசிக்கிறீர்களா. இதோ ஒன்பது நாட்கள் ஒன்பது விதமான ஆரோக்கியமான, அதே சமயம் வித்யாசமான நெய்வேத்திய பிரசாதங்கள்.
பாசிப்பருப்பு அவல் இனிப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 100 கிராம்
அவல் - 50 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 100 கிராம்
தேங்காய் துருவல் - 1 மூடி
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை:
பாசிப்பருப்பை ஊற வைத்து உதிரியாக குழையாமல் வேக வைக்கவும். அவலை நீரில் அலசி வடிகட்டி வைக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நாட்டுச் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான பாசிப்பருப்பு அவல் இனிப்பு சுண்டல் தயார்.
வெந்தயக் கீரை வெள்ளை சுண்டல்
தேவையான பொருட்கள்
வெள்ளை சுண்டல் - 1/4 கிலோ
வெந்தயக் கீரை - 1 கட்டு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெள்ளை சுண்டலை ஊற வைத்து வேகவைத்துக் கொள்ளவும். வெந்தயக் கீரையை அலசி நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெந்தயக் கீரையை நெய்யில் வதக்கி சேர்க்கவும். பிறகு வேகவைத்த சுண்டலை சேர்த்து உப்பு சேர்த்து கிளறவும். இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான வெந்தயக் கீரை வெள்ளை சுண்டல் தயார்.
முளைகட்டிய நவதானிய சுண்டல்
தேவையான பொருட்கள்
9 தானியங்கள் கலவை - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தேங்காய் எண்ணெய் - ஒரு குழி கரண்டி
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கொத்து
மசாலா அரைக்க
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை - தலா 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நவதானியங்களை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலை முளைகட்டி வைக்கவும். முளை விட்டதும் வேக வைத்துக்கொள்ளவும். மசாலா அரைக்க தேவையான பொருட்களை தனித்தனியாக வறுத்து ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த நவதானியத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான முளைகட்டிய நவதானிய சுண்டல் தயார்.
சிவப்பு காராமணி பனீர் சுண்டல்
தேவையான பொருட்கள்:
சிவப்பு காராமணி - 1/4 கிலோ
பனீர் - 100 கிராம்
வெள்ளரிக்காய் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கொத்து
செய்முறை:
காராமணியை ஊற வைத்து வேகவைக்கவும். பனீரை துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு துருவிய பனீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்துக் கிளறவும். காராமணியை சேர்த்து மிளகாய்த்தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறவும். நறுக்கிய வெள்ளரிக்காய், கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சிவப்பு காராமணி பனீர் சுண்டல் தயார்.
கடலைப்பருப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 1/4 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கொத்து
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
கேரட் - 1
காரா பூந்தி - 100 கிராம்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பை ஊற வைத்து வேகவைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த கடலைப் பருப்பை சேர்த்து சீரகப்பொடி, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். அதன் மீது துருவிய கேரட், காராபூந்தி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான கடலைப் பருப்பு சுண்டல் தயார்.
அவல், சாமை பால் பழ சாதம்
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - 100 கிராம்
அவல் - 100 கிராம்
பால் - 1 லிட்டர்
மாதுளை உரித்தது - 1 சிறியது
கொய்யா - 1
ஆப்பிள் - 1
செவ்வாழை - 1
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை அலசி சுடு நீரில் ஊற வைக்கவும். சாமை அரிசியை வேகவைக்கவும். பாலை நன்கு காய்ச்சவும். ஆறியதும் வேகவைத்த சாமை அரிசி, அவல், சிறிது சிறிதாக நறுக்கிய பழங்கள், முந்திரி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். சுவையான அவல், சாமை அரிசி பால் பழ சாதம் தயார்.
தினை மாவு சேமியா பாயசம்
தேவையான பொருட்கள்
தினை மாவு - 1/4 கிலோ
தேங்காய் பால் - 2 கப்
வெல்லம் - 1/4 கிலோ
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
காய்ந்த திராட்சை - 10
பாதாம் - 5
பிஸ்தா - 5
ஏலக்காய்பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
தினைமாவை நெய்யில் வறுத்து தண்ணீர் ஊற்றி இடியாப்பம் மாவு பக்குவத்தில் பிசையவும். இட்லி பாத்திரத்தில் சேமியா போல பிழிந்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு ஆறியதும் தேங்காய்ப்பாலில் ஊற்றவும். முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். வேக வைத்த தினை சேமியாவை நறுக்கி போடவும். பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்த்து கலக்கவும். சுவையான தினை மாவு சேமியா பாயசம் தயார்.