தேர்தலுக்கு முன்பே அரிதாரம் பூச தொடங்கிவிட்ட இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கடல் போல் கொந்தளித்த பெண் மேயர் ஒருவரால் அண்டை மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியிலும் சலசலசப்பு ஏற்பட்டிருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வட மாவட்டங்களில் ஒன்றாக ‘கடல்’ ஊர் இருக்கு.. இங்குள்ள மாநகராட்சியின் பிரதிநிதிகளை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லையாம்.. இதன் புகைச்சல் தொடர்கதையாக நீடித்த நிலையில் சமீபத்தில் பெண் மேயர் தலைமையில் கூட்டம் நடந்ததாம்.. அப்போது பேசிய சூரியன் மற்றும் கனியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் சிலர், குப்பை, சாக்கடை பிரச்னை குறித்தான புகார்களை சரமாரி அடுக்கினார்களாம்.. அதிகாரிகள் பணிகளை முழுமையாக மேற்கொள்வதில்லை, தன்னையும் மதிப்பதில்லை என கடல் போல் கொந்தளித்தபடி பேசிய அப்பெண் மேயரானவர், இதே நிலை நீடித்தால் எல்லா பிரதிநிதிகளையும் இரண்டு பஸ் பிடித்து முதல்வரை சந்தித்து முறையிடுவேன் என கடுமையாக எச்சரித்தாராம்.. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் தராவிடில், அவர்களது சட்டையை பிடித்து கேள்வி கேளுங்கள் எனவும் ஆவேசப்பட்டாராம்.. இதன் தாக்கம் அண்டை மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளின் கவனத்துக்கு எட்டவே, அவர்களும் அடுத்த கூட்டத்துக்காக இப்போதே புகார்களுடன் தயாராகி வருகிறார்களாம்.. இதுபற்றிதான் வட மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் ஒரே பேச்சாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி காக்கி ஆதரவு ஆட்களை குறித்து லிஸ்ட் தயாரித்து வருவதால் நிர்வாகிகள் டென்ஷனிலும், சர்ச்சைக்கு பெயர் போனவர் உற்சாக மோடிலும் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சர்ச்சைக்கு பெயர்போன மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர், மாஜி காக்கி சட்டைக்காரரை பழிவாங்கும் வேலையில் முழு வீச்சில் இறங்கி விட்டாராம்.. மலராத கட்சியில் மாஜி காக்கி சட்டைக்காரர் பொறுப்பில் இருந்தபோது லிங்கசாமியின் பெயரை கொண்ட நதி மாவட்டத்தைச் சேர்ந்த சர்ச்சைக்கு பெயர் போன மாஜி தேசிய செயலாளரை ஓரங்கட்டும் வேலையை இறங்கி அடித்து வந்ததாராம்.. அப்போது அவரது ஆதரவாளர்களை ஒவ்வொருவராக பொறுப்பில் இருந்து கழற்றி விட்டுட்டாராம்.. இது இருவருக்கும் இடையே உள்கட்சி மோதலை அதிகரித்ததாம்.. மாஜி காக்கி சட்டைக்காரர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு, நெல்லைக்காரர் பொறுப்பேற்றது முதல் மாஜி தேசிய செயலாளர் உற்சாக மனநிலைக்கு மாறி இருக்கிறாராம்.. சமீபத்தில் இந்த மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு வந்த மலராத கட்சி தலைவர், மாஜி தேசிய செயலாளருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து, கூடவே வைத்துக் கொண்டாராம்.. இதனால் மீண்டும் உற்சாக மோடுக்கு திரும்பி விட்ட மாஜி தேசிய செயலாளர், மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம்.. மாஜி காக்கியின் ஆட்களை குறிவைத்து லிஸ்ட் தயாரித்து வருவதால், மாவட்டத்தில் உள்ள மலராத கட்சி நிர்வாகிகள் டென்ஷனில் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இப்போதே அரிதாரம் பூச தொடங்கிட்டாராமே இலைக்கட்சி தலைவரு..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவர் கூவத்தூரில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு எம்எல்ஏக்களும் அந்தந்த தொகுதிகளுக்கு மந்திரியாக தான் செயல்பட்டு வந்தாங்களாம்.. அவர்களின் பகுதிக்குள் எந்த வேலை நடந்தாலும் எல்லாமே அவர்களுக்குதான் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வந்துச்சாம்.. இதனால் அவர்கள் எந்த குடைச்சலும் கொடுக்காமல் நாலரை ஆண்டுகளில் சேமிக்க வேண்டியதை சேர்த்துக்கிட்டார்களாம்.. அப்போது தான் ஊரெல்லாம் மேம்பாலம் கட்டினாங்களாம்.. அதேபோல ஆட்சி முடியும் காலக்கட்டத்தில் செய்ய முடியாது என்பது தெரிந்தும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் அதற்குண்டான பலனையும் வாங்கி கிட்டதாக கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க.. குறிப்பாக அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை அறிவிச்சாராம்.. மேட்டூர் அணையில் இருந்து உபரியாக வெளியேறும் தண்ணீரை வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தையும் அறிவிச்சாராம்.. அவரது ஆட்சியின் போது ஆறு, ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் நிரப்பும் பணி நடந்துச்சாம்... ஆனால் மீதமுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையிலான நிலஆர்ஜிதம் எதுவுமே நடக்கலையாம்.. அதன்பிறகு வந்த திமுக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி, நிலஆர்ஜிதம் செய்து தற்போது வரை 66 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றிருக்காங்களாம்.. திட்டத்தை முழு அளவில் கொண்டு வந்து நிறைவேற்றியதால் விவசாயிகள் எல்லோரும் திமுக அரசை பாராட்டுறாங்களாம்.. என்றாலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடகத்தை இப்போதே அரங்கேற்றம் செய்ய இலைக்கட்சி தலைவர் தொடங்கிட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. சில நாட்களுக்கு முன்பு இலைக்கட்சி தலைவர் தனது பரிவாரங்களுடன் ஏரிக்கு போயிருக்காரு.. முன்னதாக புகழ்பெற்ற பெருமாள் கோயிலில் சாமி கும்பிட்டாராம்.. எந்த நல்லகாரியம் என்றாலும் அங்கிருந்து தான் தொடங்குவாராம்... அவர் சிஎம் ஆக இருந்தபோது, கும்பாபிஷேகம் நடந்து 30 நாள் ஆகியிருந்ததாம்.. அவர் கோயிலுக்குள் வரக்கூடாது என அவ்வூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம்.. அதையும் மீறி கோயிலுக்கு வந்ததில் தீட்டு ஏற்பட்டு போனதாகவும், அதன்பிறகு அவருக்கு அரசியலில் எந்த நல்லதும் நடக்கலன்னும் ஒரு பேச்சு இருக்குது.. அந்த கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, ஏரிக்கு போனாராம்.. ஏரியை பார்த்ததும் புஷ்பத்தை கையில் எடுத்து கும்பிட்டு கும்பிட்டு வீசினாராம்.. அதை அருகில் இருந்து பார்த்த கட்சிக்காரங்க தலைவரு எப்படியெல்லாம் நடிக்கிறாருன்னு நமட்டு சிரிப்பு சிரிச்சாங்களாம்.. இனி அடுத்ததாக மாங்கனி மாநரில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தின் மேல ஏறி பூ வீச திட்டம் வச்சியிருக்காராம்... தேர்தல் வருவதற்கு முன்பாகவே அரிதாரம் பூச தலைவர் தொடங்கிவிட்டதாக இலைக்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.