சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கொடியேற்று விழா
சேலம், ஜூலை 24: ஆடிப்பெருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி நடந்தது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். அந்த வகையில் சேலத்தில் ஆடி மாதத்தில் மாரியம்மன் கோயில்களில் 22 நாட்கள் ஆடிப்பெருவிழா கொண்டாடப்படும். இதையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடந்தது. தொடர்ந்து நேற்று (23ம் தேதி) ஆடிப்பெருவிழாவையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், மஞ்சள், விபூதி, குங்குமம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி நடந்தது.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடத்தி கொடியேற்று விழா நடந்தது. இதில் அறங்காவலர் குழுவினர், கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கோட்டை மாரியம்மன் கோயிலில் 29ம் தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடுதல், ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 7.30 மணிக்கு சக்தி அழைப்பு, 5ம் தேதி காலை 8 மணிக்கு சக்தி கரகம், 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை பொங்கல், மாவிளக்கு வைத்தல், உருளுதண்டம், பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி காலை 9.15 மணிக்கு முதன்முறையாக புதிய மரத்தேரோட்டம் நடக்கிறது. 9ம் தேதி அதிகாலை கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் சேர்த்தல், 10ம் தேதி இரவு 8 மணிக்கு சத்தாபரணம், 11ம் தேதி பிற்பகல் வசந்த உற்சவம், 12ம் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 16ம் தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.