ஏழை கைதிகள் ஜாமீன் பெற ஒன்றிய நிதி; மாநிலங்களுக்கு உள்துறை வேண்டுகோள்
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறைகளில் ஏழை கைதிகள் நிதி நெருக்கடி காரணமாக அபராதம் செலுத்தாததால் ஜாமீன் பெறவோ அல்லது சிறையில் விடுதலை பெற்று வரவோ முடியாத நிலையில் உள்ளனர். இது போன்ற ஏழை கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடந்த 2023 மே மாதம், ஏழை கைதிகளுக்கான ஆதரவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் பல மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் இந்த திட்டத்தின் கீழ் தகுதியான கைதிகளை அடையாளம் காணவில்லை.பல முறை நினைவூட்டல் அனுப்பியும் அந்த நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் நிதியைப் பயன்படுத்தியுள்ள நிலையில், அவர்களால் இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக செயல்படுத்தவில்லை.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாநில தலைமையகங்களிலும் குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. தகுதியான கைதிகளுக்கு நிதி உதவி வழங்குவது இந்த குழுக்களின் பொறுப்பாகும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.